தேடல் விடியல் தரும்

/* இருப்பதில் சிறந்தது*/

பேன்சன் என்னும் ஜென் துறவி சந்தையில் நடந்து செல்கையில் ஒரு கசாப்புக்கடையில் நடைபெற்ற விவாதம் ஒன்றைச் செவி மடுக்க நேர்ந்தது. மாமிசம் வாங்க வந்தவன் "உன்னிடம் உள்ள மாமிசத்திலேயே இருப்பதிலேயே நல்லதை எனக்குக் கொடு" என்றான். கசாப்புக் கடைக்காரனோ, "என்னிடம் உள்ள அனைத்துமே சிறந்தது தான்" என்றான். அக்கணமே துறவி ஞானமடைந்தாராம்.

****************************************************************************

/* மௌன விரதம் */

ஒரு ஜென் குடிலில் தற்போது சேர்ந்த 4 சீடர்கள் இருந்தனர். நால்வரும் இணைந்து ஒரு வாரத்துக்கு மௌன விரதம் இருப்பது என முடிவு செய்தனர். நல்லநாள் பார்த்து விரதத்தை ஆரம்பித்தனர்.

மாலையாயிற்று. விளக்கில் எண்ணை தீரும் போல் இருந்தது. விளக்கு அணையும் நேரத்தில் முதல் சீடர் வாய் திறந்து, "இந்த விளக்கை யாரும் சரி செய்யக் கூடாதா?" என்று தன் விரதத்தை முடித்துக் கொண்டார்.

இரண்டாமவர், "நாம் யாரும் பேசக் கூடாது என்பதை மறந்து விட்டாயா?" என்று கடிந்து கொண்டார்.

மூன்றாமவர், "நீங்கள் இருவரும் முட்டாள்கள். விரதத்தைப் பாழடித்துவிட்டீர்களே" என்று தனது விரதத்தை முடித்தார்.

நான்காமவர் முத்தாய்ப்பாக, "நான் தான் கடைசி வரை பேசவில்லை பார்த்தீர்களா!" என்று தனது கடுமையான விரதத்தினை முடித்துக் கொண்டார்!

*******************************************************************************************

/* குருவின் (சே) தேவை */

ஒரு ஜென் துறவிக்கு நிறைய சீடர்கள் இருந்தனர்.

ஒரு சீடன் திருடும் போது பிடிபட்டுக் கொண்டான். அவனை உடனே வெளியனுப்புமாறு மற்ற சீடர்கள் கேட்டுக் கொண்டனர். துறவியோ கண்டுகொள்ளவே இல்லை.

மீண்டும் ஒரு முறை அவன் திருடும் போது பிடிபட்டான். அப்போதும் துறவி அதைக் கண்டுகொள்ளவில்லை.

உடனே மற்ற சீடர்கள் அனைவரும் ஒரு மனு எழுதி அச்சீடனை வெளியே அனுப்பாவிட்டால் தாங்கள் அனைவரும் வெளியேறப்போவதாக எழுதி அனைவரும் கையொப்பமிட்டிருந்தனர்.

அதைப் படித்த துறவி அன்பு கனிந்த குரலில் கீழ்க்கண்டவாறு கூறினாராம்:

"சீடர்களே நீங்கள் அனைவரும் எத்துணை புத்திசாலிகள் என்பதை நினைத்துப் பெருமையடைகிறேன். உங்களால் எது சரி என்றும் எது தவறு என்றும் அறிய முடிகிறதே! நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் இந்த சீடருக்கு என்னைத் தவிர வேறு யார் எது சரி என்றும் எது தவறு என்றும் எவ்வாறு தவறுகளில் இருந்து சரியாகப் பயில வேண்டும் என்பதையும் சொல்லித் தருவார்கள்?"

அப்போது அந்த சீடர் கண்களில் இருந்து கண்ணீர் பொலபொலவென வழிந்ததுடன் அதன் பிறகு அவர் திருடவேயில்லை.

அந்த ஜப்பானிய ஜென் துறவியின் பெயர் பேங்கீய் ஆகும்.
*****************************************************************************************

/* திருட்டு சீடன் */

ஒரு ஜென் துறவி தியானத்தில் இருக்கையில் ஒரு திருடன் வந்து அவரைப் பயமுறுத்தினான். அவரோ சிறிதும் கலங்காமல், "உனக்குத் தேவையானது அந்தப் பெட்டியில் உள்ளது. வேண்டுமானால் வேண்டும் வரை எடுத்துக் கொள்" என்றார். அவனும் மீதி கொஞ்சம் வைத்து விட்டு பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேற நினைக்கையில் துறவி, "பொருளை எடுத்தால் அவருக்கு நன்றி சொல்ல வேண்டாமா?" என்று கேட்க, அவனும் நன்றி சொல்லி விட்டு சென்றுவிட்டான். பின்பு பிடிபட்டுக் கொண்டான். சாட்சிக்கு துறவியை வரவழைத்தவுடன் அவர் சொன்னார், "இவருக்கு நான் தான் பணத்தையும் பொருட்களையும் கொடுத்தேன். அவர் அதற்கு நன்றி கூடத் தெரிவித்தார்" என்றார். அத்திருடன் பின்னாளில் சிச்சிரி கோஜுன் என்னும் அத்துறவியின் மிகச் சிறந்த சீடரானார்.

*****************************************************************

/* மெய் ஞானம் */

ஒரு முறை ஒரு வயதான ஜென் துறவி, தனது சீடர்களை அழைத்து, ஒரு இளஞ்சீடனைக் குறிப்பிட்டு, அவன் மெய்யறிவு பெற்று விட்டதாகவும். ஜென்னைப் பற்றி முழுமையாக அறிந்து விட்டான் என்றும் கூறினார்.
சீடர்களுக்கோ மிகுந்த ஆச்சரியம். அவனை விட வயதிலும் அனுபவத்திலும் மூத்த சீடர்கள் பலர் அங்கிருந்தனர்.

சீடர்கள் அனைவரும், அந்த இளஞ்சீடனைப் பார்த்து, "நீ மெய்யறிவைக் கண்டு விட்டாயா?" என்று கேட்டனர்.

இளஞ்சீடனும், "ஆம். கண்டு கொண்டேன்." என்றான்.

சீடர்கள், ஆவல் மிகுதியில், "மெய்யறிவு பெற்ற அனுபவம் எவ்வாறிருந்தது?" என்றனர்.

இளஞ்சீடனோ, "எப்போதும் போல. அற்புதமாய்." என்று புன்முறுவலுடன் கூறினார்.

**************************************************************************************

நேசிக்கிறேன் எதிரிகளை!!

நேசிக்கிறேன் என்
எதிரிகளை!

வாழ்வில் வெற்றி
பெற நண்பன்
தேவை! - ஆனால்
வாழ்க்கை முழுவதும்
வெற்றி பெற
தேவை - எதிரிதான்!!

வெற்றிக்கு
உதவுபவன் நண்பன்
என்றால் - காரணம்
எதிரியல்லவா

நம்மைவிட
நண்பர்களை விட
நம் செயல்பாடுகளை
கணித்து - நம்மை
வெல்லத்துடிக்கும்
எதிரிகளை
நேசிக்கிறேன் !!

இலக்கை நோக்கி
ஓட உன்னை
உற்சாகபடுத்துபவன் தோழன்

தானும் உறங்காமல்
உன்னையும் உறங்கவிடாமல்
வெற்றியை நோக்கி 
ஓட துரத்துபவன்
எதிரி !!

ஆதலால்
நேசிக்கிறேன் எதிரிகளை!!

--
அன்புடன்  உங்கள் சகா
**பயமறியான்**

கடவுளும் மனிதனாக!!

இருப்பதையும்
இல்லாததையும்
படைத்தவன்
இருப்பவனா? இல்லாதவனா?


தேவை இல்லை 
அதிகமாய் ஆராய்ச்சி!


கடவுளை 
மறந்து மனிதனை 
நினை   - நினைத்தால்
அந்த கடவுளும்
வருவான் - தன்னை
மறந்து மனிதனாக!!

  
  

/* அனைவரும் சமம்*/

பேங்கீய் என்னும் ஜென் துறவியின் கீழ் பல சீடர்கள் இருந்தனர். அவர்களுள் டைரியோ என்னும் சீடனும் இருந்தான். அவன் நன்கு சமைப்பான். அவனுக்கு வயதான தன் துறவியைக் கவனித்துக் கொள்ள வேண்டுமென்று மிக்க ஆசை. ஒரு முறை சோயா பீன்சுடன், கோதுமை மற்றும் பல பொருட்கள் கலந்து மிகச் சுவையான பதார்த்தம் ஒன்றைத் தயாரித்து அனைவருக்கும் வைக்கும் போது குருவுக்கு மட்டும் சிறிது அதிகம் வைத்தான். குரு கோபத்துடன் அவனை அழைத்து, "நான் சாப்பிடக் கூடாது என்று நினைத்தாயோ?" என்று சொல்லிவிட்டு அவரது அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டார்.


சீடனோ வருத்தத்துடன் அவர் அறைக் கதவுக்கு வெளியில் நின்று மன்னித்துக் கொள்ளும் படி வேண்டிக் கொண்டான். பதிலே காணோம். மூன்று நாட்கள் ஆகின. கதவே திறக்கப்படவில்லை.

கடைசியில் குருவுக்கு பலத்த குரலில், "நீங்கள் சாப்பிடாமல் வேண்டுமானால் இருங்கள். உங்கள் இளஞ் சீடனும் பசியுடன் தான் இருப்பான் என்பதை மறந்து விடாதீர்கள்!" என்று ஒரு வாக்கியம் கேட்டது. அந்த விநாடியே கதவு திறக்கப்பட்டது.


குரு சீடனிடம், "அனைவருக்கும் கிடைக்கும் உணவே எனக்கும் கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீ குருவாகும் போதும் இதை மறக்காதே!" என்றார் 
 
***************************************************************************
 

/* அறிவுரைகள் */

ஜென்கெட்சூ என்னும் ஜென் துறவி தமது சீடர்களுக்கு அறிவுரையாக கீழ்க்கண்ட வாசகங்களை அருளினார்.

1. உண்மையான ஜென் என்றால், இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டே இவ்வுலகத்தின் ஒரு தூசியின் மீது கூட பற்று வைக்காதவனாக இருக்க வேண்டும்.

2. அடுத்தவர்கள் நல்லது செய்தால் அதைப் போல நாமும் செய்ய வேண்டும் என்று மனதுக்கு ஆணையிடுங்கள். அடுத்தவர் தவறு செய்தால் அதைப் போல் நாம் செய்யாமல் இருக்க வேண்டும் என்று உங்கள் மனதுக்கு அறிவுரை சொல்லுங்கள்.

3. ஒரு இருட்டறையில் இருந்தாலும் உங்கள் முன் உங்களுக்குப் பிடித்த ஒரு விருந்தாளி இருப்பது போலவே உணருங்கள். உங்கள் உண்மையான தன்மை தவிர எந்த உணர்ச்சியையும் அதிகப் படுத்தி காட்டாதீர்கள்.

4. ஏழ்மை உங்கள் சொத்து. அதை சொகுசு வாழ்க்கைக்கு எக்காலத்திலும் பரிவர்த்தனை செய்து விடாதீர்கள்.

5. முட்டாளாகத் தோன்றும் ஒருவன் முட்டாளாக இல்லாமல் இருக்கலாம். தனது ஞானத்தை தனக்குள் கவனமாக பாதுகாத்துக் கொண்டிருக்கலாம்.

6. ஞானம் என்பது சுய கட்டுப்பாட்டினால் தானாக வருவது. ஏதோ வானத்தில் இருந்து உங்கள் கைகளில் வந்து விழுவதில்லை.

7. பண்பே ஞானம் அடைவதின் முதல் படி. உங்களை நீங்களே அறிமுகப்படுத்திக் கொள்வதற்கு முன் அவர்களே உங்களைப் பற்றி தெரிந்து கொள்ளட்டும்.

8. ஒரு மேலான இதயம் தன்னை எப்போதும் முன்னிறுத்துவதில்லை. அதன் வார்த்தைகள் அடிக்கடி வருவதில்லை. நவரத்தினங்களைக் காட்டிலும் அவை மதிப்பு மிக்கவை.

9. ஒரு சிறந்த ஜென் துறவிக்கு எல்லா நாட்களும் அதிர்ஷ்ட நாட்களே. காலத்தை அவன் கடந்து செல்ல விடுவதில்லை. அதனுடனேயே நடக்கிறான். புகழோ இழிவோ அவனை அசைக்க முடிவதில்லை.

10. திருத்து. உன்னை மட்டும். அடுத்தவர்களை அல்ல. சரியையும், தவறையும் எக்காலத்திலும் விவாதிக்காதே.

11. சில சரியான விஷயங்கள் பல தலைமுறைகளாக தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நூறாண்டுகளுக்குப் பின்னர் கூட ஒரு விஷயத்தின் சரியான கோணம் புரிந்து கொள்ளப்படும். எனவே தற்காலிகமாக நீ அதைத் தூக்கி நிறுத்தத் தேவையில்லை.

12. காரணத்தோடு வாழுங்கள். பலன்களைப் பற்றி கவலைப்படாதீர்கள். அதை இந்த பேரண்டம் கவனித்துக் கொள்ளும். ஒவ்வொரு நாளையும் சமாதானமான முறையில் வழிநடத்துங்கள்.

*******************************************************************************************

சாகும் - தமிழும் தமிழனும்

தமிழ் இனி
மெல்லச் சாகும்
என்று பாடினான்
பாரதி - யாரும்
சொல்லவில்லையே
தமிழனும் இனி
மெல்லச் சாவான்
என்று?


இறப்பிற்கு பின்
எழுதிடுங்கள் - எங்கள்
கல்லறையில்

இதற்கு காரணம்
எங்கள் தாய்மொழி
என்று!!

சட்டை இல்லாதோர் 
என நினைத்த 
சட்டத்தை நோக்கி 
விரைவில் சாட்டை
சுழலும்

மாண்டு விழுவார்கள் 
மனிதநேயம் அற்ற 
அரக்கர்கள்